திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை; காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2023 11:08
திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் மலைப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் திருமலையில் தேவஸ்தான தலைவர் பி கருணாகர ரெட்டி, திருப்பதியில் மாவட்ட ஆட்சியர், நிர்வாக அதிகாரிஆகியோருடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி, நடைபாதை பாதைகள் மற்றும் காட் ஆகிய இரு வழிகளிலும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
அவர் கூறியதாவது: சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை கொன்றது மிகவும் துயரத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மலைப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலைக்கு குழந்தைகளுடன் நடந்து செல்வோர் அவர்களை தனியே விடக்கூடாது. எல்லோரும் கூட்டமாக செல்ல வேண்டும். இனி 100 பேர் கொண்ட கூட்டத்துடன் ஒரு பாதுகாவலரை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். மிருகங்கள் நடமாடும் பகுதிகளில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்படுவர். காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இரு நடைபாதை வழிகளிலும் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இரு சக்கர வாகனங்களின் இயக்கமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகள் பிரச்னை தீரும் வரை யாத்ரீகர் பக்தர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானம் எடுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கு பக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.