மனிதனாக பிறந்தாலே பல கடமைகள் இருக்கும். அவற்றில் பஞ்ச மகாயக்ஞம் எனப்படும் பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் முக்கியம். யக்ஞம் என்றால் மந்திரங்களை சொல்லியபடி, அதற்கான ஒரு செயலை அக்னி முகமாக செய்வது என்று அர்த்தம். அதாவது இதை யாகம் என சொல்லலாம். ‘யஜ்’ என்கிற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது யக்ஞம். ‘யஜ்’ என்றால் வழிபடுவது, பக்தி செலுத்துவது என்றும் அர்த்தம். வேதம் ஓதுவதும், ஓதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. பொதுவாக ஒருவர் தனக்கு உரிய பணியை செய்வதை பிரம்ம யக்ஞம் என்றும் சொல்லலாம். ஈ, எறும்பு, காகம், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு வழங்குவதை பூத யக்ஞம் ஆகும். வீட்டிற்கு வரும் அதிதிகளுக்கு தங்க இடம் கொடுப்பது, அவர்களுக்கு உணவு அளிப்பது. மனுஷ்ய யக்ஞம். அதுபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) கொடுத்து நன்றிக்கடன் செலுத்துவது பித்ரு யக்ஞம். இதையே திருவள்ளுவர், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என ஐந்து கடமைகளை சொல்கிறார். எனவே இவற்றை கடைபிடித்து புண்ணியத்தை சேர்ப்போம்.