நம்மை நாமே உணரும் நிலைக்கு செல்ல பல தடைகள் வரும். பூட்டிய வாசலாக காட்சி தரும் தடைகளை திறக்கும் சாவியை தருகிறது கீதை. வாழ்வில் வழிமறித்து குறுக்கே நிற்கும் பாதைகளை தவிர்த்து பிறவழிகளில் செல்லும் எண்ணத்தையும் நமக்கு தருகிறது கீதை. அப்படி ஒரு மந்திரச் சாவி தான் பிறரை உங்களில் காண்பதும், உங்களை பிறரில் காண்பதும்! ‛உங்களில் நான் இருக்கிறேன்; நான் உருவமற்றவன்’ என்பார் கிருஷ்ணன். கழுதையை கண்டாலும், திருடனை கண்டாலும் கூட அவர்கள் நல்லது செய்பவர்கள் என்றால் தலை குனியலாம். அது கடவுளிடத்தில் குனிந்து வணங்குவது போன்றதே! நல்ல தருணமாயினும், கெட்ட தருணமாயினும் நாமே முடிவுகள் எடுக்கும்படியாகவே நமது மூளை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நமக்கு வரும் திடீர் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கவோ அல்லது அதில் சிக்கவோ மூளை தான் முடிவெடுக்கிறது. மற்ற எல்லா விஷயங்கள் போலவும் இதுவும் இரட்டை விளிம்பில் கூர்மையுள்ள கத்தி தான். சில நேரங்களில் நம்மை மீறி மூளை முடிவெடுத்து விடுகிறது. இந்த இடத்தில் தான் அகங்காரம் பிறக்கிறது. ‛நானே எல்லாம்’ என்ற நிலை. இதில் இருந்து விடுபட மனதை அடிமையாக்க வேண்டும் என்கிறது கீதை தரும் அந்த மந்திரச்சாவி. மனமும், உடலின் பிற உறுப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொன்றும் தனித்தனியாக செயல்பட முடியாது. கீதையின் வழிகாட்டுதலை பின்பற்றும் போது மற்றவர்களிடம் கருணை காட்டுகிறோம்; நம்மை நாமே உணர்கிறோம். இதை உணர்ந்து கொள்வதற்கான சிறந்த வழி ஒன்று உண்டு. ஏதோ ஒரு காரணத்திற்காக யாரை நாம் எதிரியாகக் கருதுகிறோமோ, அவரிடமே கருணை காட்டி அவரை கடவுளாக பார்ப்பதுதான் அந்த வழி. ஆனால் அப்படி பார்ப்பது சற்று கடினமான விஷயம் தான். அவர் சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஏற்படுத்திய மனக்காயங்கள், மோசமான நினைவுகள் மனதில் வந்து அலைமோதும். நாம் அவரை மன்னிக்க முடிந்தால் பின்னர் நடப்பவை மகிழ்ச்சி தருவதாக அமையும்.
உங்களின் இந்த மனநிலையில், எதிரிகள் தந்த சங்கடங்கள் காணாமல் போய்விடும். இப்படி பலருக்கும் பல நேரங்களில் அனுபவம் ஏற்பட்டிருக்கும். எதிரியையும் கருணை காட்டி அரவணைக்கும் மனம் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். நமக்கு நாமே விழிப்புணர்வு பெறும் நிலையும், பிறருக்கு கருணை காட்டும் நிலையும் ஒரு படகை ஓட்டிச் செல்லும் இரண்டு துடுப்புகள் போன்றவை. கீதை காட்டும் பாதையாகிய நதியில் பயணம் செய்து, இந்த படகு கரை சேரும் போது, நம் உள்மனதை நம்மால் உணர முடியும். அப்போது கடவுளான கண்ணனையும் காண முடியும்.