பதிவு செய்த நாள்
16
ஆக
2023
05:08
தேவிபட்டினம்; தேவிபட்டினம் கடல் உள்வாங்கியதால், ஆடி அமாவாசை தினத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடல் நீர் நவபாஷாண கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் வரை உள்வாங்கி காணப்பட்டது. வழக்கத்தைவிட நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதியையும் தாண்டி கடல் நீர் இன்றி காணப்பட்டதால், நீராட வந்த பக்தர்கள் போதிய தண்ணீர் இன்றி கடும் சிரமம் அடைந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் குறைந்த அளவு நீரில் நீராடியதால், தண்ணீர் மிகவும் கலங்கலாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தவாறு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் நீர் உள்வாங்கி காணப்படுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், அதிக தொலைவு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் மீனவர்களும், பொது மக்களும் அச்சமடைந்தனர்.