பதிவு செய்த நாள்
16
ஆக
2023
06:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கடந்த நான்கு நாட்களில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஆக.12 முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 அன்று 3 ஆயிரம், 13 அன்று 12 ஆயிரம், 14 அன்று 3 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில் சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் காலை 5:10 மணிக்கே வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால், வனப்பகுதி வறண்டும், ஓடைகளில் நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், பக்தர்கள் தொடர்ந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து அடிவாரம் திரும்பினர்.
மலையடிவாரத்தில் தனியார் அன்னதான மடங்கள் சார்பிலும், கோயிலில் அறநிலையத்துறை சார்பிலும் இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடி அமாவாசை நாளான இன்று (ஆக.16) அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் செய்துள்ளனர். இன்று சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள், 8 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசாரும், தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு சிறப்பு பிரிவு படை போலீசாரும், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரம், தீயணைப்பு வருவாய், போக்குவரத்து, உள்ளாட்சித் துறையினர் அடிவாரத்தில் சிறப்பு முகாம்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.