பதிவு செய்த நாள்
17
ஆக
2023
10:08
ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா, ஆக., 13 பிரதோஷ நாள் முதல் துவங்கியது. ஆடி அமாவாசை நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் திரண்டதால் அதிகாலை 4:00 மணிக்கே வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணிக்கு சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறிய நிலையிலும், தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்ததால் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இதில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதிகாலை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன், அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக மூலஸ்தானம் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறநிலை துறை அதிகாரிகள் செய்திருந்தனர். மலை அடிவாரத்தில் தனியார் அன்னதான மடங்கள், கோயிலில் அறநிலைத்துறை சார்பிலும் பக்தர்களுக்கு இடைவிடாது தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இரண்டு ஏ.டி.எஸ்.பி.,கள் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசாரும், தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு பிரிவு போலீசாரும், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டிவிகள் மற்றும் ட்ரோன் கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர். சுகாதாரம், தீயணைப்பு, வருவாய், போக்குவரத்து, உள்ளாட்சி துறையினர் அடிவாரம் முதல் கோயில் வரை சிறப்பு முகாம்கள் அமைத்து கண்காணித்து வந்தனர்.
தண்ணீருக்கு தவிப்பு: அடிவாரத்தில் இருந்து கோயில் வரை தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தும், போதியளவிற்கு குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டனர். மலைப்பாதையில் தற்காலிக கடைகள் அமைத்து குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க மலைவாழ் மக்களுக்கு அனுமதி கொடுக்காத நிலையில், பல்வேறு இடங்களில் தனி நபர்கள் தண்ணீர் பாட்டில்கள், சர்பத் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்தது, பக்தர்களின் குடிநீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்தது.