பதிவு செய்த நாள்
22
ஆக
2023
11:08
ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அருகே, ஆரணி அடுத்த, சிறுவாபுரி கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், பாலசுப்ரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர, மற்ற விக்ரகங்கள் அனைத்தும், மரகத பச்சை கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள மூலவரை தரிசனம் செய்தால், வாஸ்து தோஷம், திருமண தடை ஆகியவை நிவர்த்தி ஆகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகள் ஆன நிலையில், கோவில் கோபுரம், சிலைகள் ஆகியவை பொலிவிழந்து காணப்பட்டன. அதனால், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூலவர் சன்னிதி, அண்ணாமலையார் சன்னிதி, விநாயகர் சன்னிதி, பரிவார சன்னிதிகள், ராஜகோபுரம் ஆகியவை புதுப்பித்தல், மதில் சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைத் தளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல, க்யூ அமைத்தல், குடிநீர் வசதி போன்ற பணிகள் முடிந்து, கடந்தாண்டு இதே நாளில் கும்பாபிஷேகம் நடந்தது. பின், 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. விழா முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், நேற்று கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. யாகசாலை அமைத்து, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.