பதிவு செய்த நாள்
28
ஆக
2023
04:08
திருப்பதி; திருமலையில் நடந்து வரும் பவித்ரோத்ஸவம் விழா இரண்டாம் நாளில் பெருமாளுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இவ்விழாவானது திருமலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இரண்டாம் நாளில் காலை யாகசாலையில் ஹோமம் மற்றும் வேள்வி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெற்றது.
பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், வேதகோஷம் மற்றும் மங்கள வாத்தியங்களுடன், ஸ்ரீவாரி மூலவர், உற்சவ மூர்த்திகள், ஜெய விஜயர்கள், கருடாழ்வார்கள், வரதராஜசுவாமிகள், வகுளமாதா அம்மா, ஆனந்த நிலையம், யாகசாலை, விஷ்வக்சேனர்கள், யோகநரசிம்மசுவாமி, பாஷ்யகர்கள், பொது தாயார், கொடிமரம், புவரஹஸ்வாமி மற்றும் ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீமலையப்பசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8 மணி முதல் 11 மணி வரை யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெறும். இதன் காரணமாக கோயிலில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ரதிபாலங்கரண சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இன்றைய விழாவில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெத்தஜெயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ சின்னஜெயர் சுவாமி, இ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இஓ ஸ்ரீ லோகநாதம், பேஷ்கார் ஸ்ரீ ஸ்ரீஹரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.