பாலக்காடு: ஓணம் பண்டிகையையொட்டி குருவாயூர் கோவிலில் இன்று உத்திராடம் நாள் நேந்திரன் பழக்குலை சமர்ப்பணம் விமர்சையாக நடந்தது.
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று முதல் ஆரம்பித்தன. பூக்கோலம் போட்டும் ஆடல் பாடல்களுடன் மூன்று நாட்களுக்கு இந்தக் கொண்டாட்டம் களை கட்டும். இந்த நிலையில் பண்டிகையையொட்டி உத்திராடம் நாளான இன்று கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு உத்திராடம் தின நேந்திரன் பழக்குலை சமர்ப்பணம் விமர்சையாக நடைபெற்றது. காலையில் யானைகள் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் உள்ளே கொடி மரத்தடியில் வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில் மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரி, தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் விஜயன், உறுப்பினர்களான மனோஜ், சுரேந்திரன், கோபிநாத், தேவேந்திரன் ஆகியோர் முதலில் மூலவருக்கு நேந்திரன் பழக்குலை சமர்ப்பித்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையாய் நின்ற பக்தர்களும் மூலவருக்கு நேந்திரன் பழக்குலை சமர்ப்பித்து வழிபட்டனர். இந்த பழக்குலைகளில் பொருத்தமானவை திருவோணம் நாளான இன்று நிவேதியத்திற்கு தேவையான பாயாசம் தயாரிப்பதற்காக எடுக்கப்படும்.