அன்னூர்: அன்னூர் அருகே 600 ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி, லக்கே பாளையம் கோவில் பாளையத்தில், 600 ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கருப்பராயர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. இங்கு, ஒவ்வொரு வாரமும், செவ்வாயன்று சிறப்பு வழிபாடும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளன்று விசேஷ பூஜைகளும் நடக்கிறது. ஆடி மாதம் நடைபெறும் பூச்சொரியும் விழா இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் ஈஞ்சன் குலத்தாருக்கு குலதெய்வமாக உள்ளது. சக்தி வாய்ந்த இந்த கோவிலில் ஆறு மாதங்களுக்கு முன்பு பாலாலயத்துடன் திருப்பணி துவங்கியது. புதிதாக கோபுரம், அர்த்த மண்டபம், விநாயகர் சன்னதி, கருப்பராயன் சன்னதி ஆகியவை முழுமையாக கருங்கற்களால் கட்டும் பணி நடந்து வருகிறது. திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் முடித்து கும்பாபிஷேகம் செய்ய உள்ளதாக திருப்பணி கமிட்டியினர் தெரிவித்தனர்.