பதிவு செய்த நாள்
29
ஆக
2023
10:08
திருவனந்தபுரம்: மலையாள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகமெங்கும் வாழும் மலையாள மக்களின் உன்னதப் பெருவிழா, ஓணம் பண்டிகை. மலையாள மக்களை, முன்னர் ஆண்டதாக கருதப்படும், மகாபலி சக்கரவர்த்தி, தன் குடிமக்களின் வீடுகளுக்கு வரும் நாளாக, மலையாள பஞ்சாங்கத்தின், சிங்கம் மாதத்தின் திருவோணம் நட்சத்திர நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளையே, திருவோண நாளாக மலையாள மக்கள் கொண்டாடுகின்றனர். கோவில்களில் வழிபட்டு, விருந்துண்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு, பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்து, அதிகாலையிலேயே, கோவில்களுக்கு சென்று, தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கிய மலையாள மக்கள், "ஓணசத்ய எனப்படும், விமரிசையான உணவு வரிசைகளுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர். வீடுகளின் முன், அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் கட்டி ஆடி, பண்டிகையை கொண்டாடினர். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விலை, மிக அதிகமாக இருந்ததாக கூறும் மலையாள மக்கள், அதைப் பொருட்படுத்தாமல், ஏராளமாக செலவு செய்து, விருந்திற்கான உணவு பதார்த்தங்களை தயாரித்துள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில்களில், பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.