பதிவு செய்த நாள்
29
ஆக
2023
10:08
புதுடில்லி: தமிழகத்தில், 27,000 கோவில்களுக்கான அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழு அமைக்கப்படுவதில் தாமதம் செய்யப்படுவதாக, ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜன., 30ல் உத்தரவிட்டிருந்தது. இதன்படி மே மாதம் தாக்கல் செய்த அறிக்கையில், மே மாத இறுதிக்குள் அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் குழு அமைக்கப்படும் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட மனுவில் தமிழக அரசு கூறியுள்ளதாவது: தமிழகத்தில், 6,420 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 3,471 கோவில்களில் பரம்பரை அறங்காவலர்களும், 2,949 கோவில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், 27,362 கோவில்களில் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. மீண்டும் இது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.