அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் திருட்டு; ஆலம்பாடியில் மக்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2023 05:08
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் அய்யனார் மற்றும் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் ஏரிக்கரை அருகே அய்யனார் மற்றும் செல்லியம்மன் கோவில்கள் உள்ளது. குடியிருப்பு பகுதியிலிருந்து சற்று தொலைவில் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. நேற்று இரவு 8மணியளவில் இக்கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்து சூலத்தை எடுத்து கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளிருந்த உண்டியலில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். மேலும் கோவில்களில் இருந்த சில்வர் பொருட்களையும் திருடிச்சென்றனர். இன்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். திட்டக்குடி அடுத்த பனையாந்தூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திரவுபதியம்மன் கோவில் சுவற்றை துளையிட்டு உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், செயின் பறிப்பு சம்பவங்களால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆலம்பாடி அய்யனார் கோவிலில் இரண்டு மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடும் சி.சி.டி.வி.,பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.