வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; அனுவாவி கோவிலில் மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2023 06:08
சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆனைகட்டி ரோட்டில் தடாகத்தில் மலை மீது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். தினமும் மாலை நேரத்தில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் அருகே நடமாடுவது வழக்கமாக உள்ளது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இந்நிலையில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், காலை, 9.00 மணி முதல் மதியம், 3.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என, கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை அடிவாரத்தில் கோயிலின் முன்பு, கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த வாரம் மாலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டுகளின் அருகே நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், படிக்கட்டுகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.