பல ஆண்டுகளாக குரங்குகளுக்கு ஓணம் விருந்து: கேரளாவில் அரங்கேறிய அதிசயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2023 10:08
கொல்லம்: ஓணம் பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக கேரள கோவிலில் குரங்குகளுக்கு விருந்து அளிக்கும் பாரம்பரிய வழக்கம் இந்த ஆண்டும் நிறைவேற்றப்பட்டது.
மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் சத்யா எனப்படும் விருந்து பரிமாறப்படுவது வழக்கம். கொச்சியின் சாஸ்தாம்கோட்டா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் நுாற்றுக்கணக்கான குரங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. பல ஆண்டுகளாக ஓணம் தினத்தன்று இந்த குரங்குகளுக்கு விருந்து அளிப்பதை கோவில் நிர்வாகம் பாரம்பரிய வழக்கமாக கடைபிடித்து வருகிறது. சீதையை தேடி ராமர் இலங்கை சென்ற வழியில் அவர் இந்த கோவிலில் ஓய்வெடுத்ததாகவும் அப்போது அவருடன் வந்த வானரப்படைகள் இந்த கோவிலில் நிரந்தரமாக தங்கி விட்டதாகவும் புராண கதைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையின் போது கோவிலில் வாழை இலை விரித்து குரங்குகளுக்கு விருந்து பரிமாறப்பட்டது. சாதம் குழம்பு பொறியல் கூட்டு அப்பளம் ஊறுகாய் பாயசம் என அனைத்து உணவுகளும் பரிமாறப்படும் வரை குரங்குகள் மரக்கிளைகளில் பொறுமையாக காத்திருந்தன. இலையில் கடைசி உணவு பரிமாறப்பட்டதும் குரங்குகள் ஒவ்வொன்றாக கீழே இறங்கி வந்து இலையில் அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டன. இந்தக் காட்சியை புதிதாக பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.