பதிவு செய்த நாள்
02
செப்
2023
12:09
சென்னை: ”ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ், 15 கோவில்களில், 1,430 கோடி ரூபாயிலான பணிகள் நடந்து வருகின்றன,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டசபை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
அதன்பின், அமைச் சர் சேகர்பாபு அளித்த பேட்டி: ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவுத் திட்டப்படி ஏற்கனவே, 10 கோவில்களில், 1,230 கோடி ரூபாயில், பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு அறிவிப்பின்படி, ஐந்து கோவில்களில், 200 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கரூர், அய்யர் மலை, சோளிங்கர் நரசிம்மர் கோவில்களில், ரோப் கார் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, - இடும்பன் மலை ஆகிய கோவில்களுக்கு ரோப் கார் வசதி நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கோரக்குட்டை மலைக் கோவில்களில், ரோப்கார் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும், 45 கோவில்களில் குளங்கள் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை, 1,737 பாதுகாப்பறைகள் கட்ட பணியாணை வழங்கப்பட்டு, 139 பணிகள் நிறைவு பெற்றுள்ளன; 927 பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.