பதிவு செய்த நாள்
11
அக்
2012
10:10
தேனி: பெரியகுளத்தில் பழமையான சிலைகள் கடத்தல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில், பழமையான ஐம்பொன் சிலைகள் இருந்தன. இதன் சாவி கோயில் அர்ச்சகர் செந்திலிடம் இருந்தது. இந்நிலையில் கடந்த 8 ம்தேதி, சிலைகளை கோயில் நிர்வாக அதிகாரி சுதா சரி பார்த்துள்ளார் மொத்தம் இருந்த 37 சிலைகளில், 19 சிலைகள் மற்றும் ஆபரண பொருட்களை காணவில்லை. இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரி சுதா, தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், கோயில் அர்ச்சகர் செந்தில், சிலை கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர் தென்கரை சுதந்திர வீதியில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலிலும் அர்ச்சகராக இருந்துள்ளார். அங்கும் 6 பழமையான சிலைகள், மற்றும் 87 கிராம் தங்கம், 27 கிராம் வெள்ளி பொருட்களை திருடி கடத்தியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்தவர்களை பிடிக்க டி.எஸ்.பி., சேது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சிலை கடத்தல் தொடர்பாக, பெரியகுளம் கார்த்திகேயன், கமர்தீன்கான், முத்துக்குமார், கள்ளிப்பட்டி ராஜேஷ், தென்கரை அஜீத்செல்வம், பல்லடத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரையும் அர்ச்சகர் செந்தில் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தென்கரை ராஜா, புதுக்கோட்டை ராஜா, திண்டுக்கல் சசிகலா, மதுரை ராஜ்குமார் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி., அறிவுசெல்வம் கூறியதாவது: பெரியகுளம் கோயில் சிலை கடத்தல் தொடர்பாக 7 பேரை கைது செய்து, 16 பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சிலைகளையும், தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகிறோம். இந்த சிலை யாருக்கு விற்கப்பட்டது. இது வெண்கல சிலையா, அல்லது ஐம்பொன்சிலையா என பரிசோதனைக்கு பின்னர் உறுதி செய்யப்படும்கடத்தலில் வெளி நாட்டு தொடர்பு ஏதும் உள்ளதா, என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம், என்றார்.