பதிவு செய்த நாள்
11
அக்
2012
10:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுத்தனர். வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில். மழைக்கு அதிபதியாக உள்ள இங்கு,ஒருவாரகாலம் விழா எடுத்து வழிபடுகின்றனர். தினம் கலைவிழாவும், இறுதி நாளில் தேரோட்டமும் நடைபெறும். அதன்படி ,இந்த ஆண்டுவிழா அக்., 3 ல், கலக்டர் ஹரிஹரன் தலைமையில், சாதி, மத நல்லிணக்க உறுதிமொழியுடன் துவங்கியது. கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம் என, தொடர்ந்து 6 நாட்கள் கலைவிழாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது.இதை தொடர்ந்து அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேரானது பக்தர்கள் கரகோஷத்துடன், மேளதாளம் முழங்க,முக்கிய ரதவீதிகள் வழியாக வலம்வந்து, மாலை 3 மணிக்கு நிலைக்கு வந்தது.இதைதொடர்ந்து அம்மன் கோயிலுக்கு செல்ல, அங்கு மஞ்சள் நீராட்டு, நேர்ச்சை செலுத்துதல், மாவிளக்கு வழிபாடு, அருள்வாக்கு நடந்தது. அம்மன் முதல்நாள் இரவில் உருவமாக தோன்றி ,மறுநாள் இரவு மறைந்து விடுவதால், விழாவின் முடிவில், அம்மன் உருவத்தை ஆற்றுநீரில் கரைப்பர். இதற்காக, அம்மன் பக்தர்களுக்கு "பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, அம்மன் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கோயிலை சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூக்களை தூவி, அம்மனை வழியனுப்பி வைத்தனர். விழாவை முன்னிட்டு வத்திராயிருப்பில், பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டதுபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிசரவணன், பக்தசபா நிர்வாகிகள், சமுதாய நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.