குரு பரிகார தலமான வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு காவிரியில் இருந்து புனித நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2023 04:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற குரு பரிகார தலமான வதான்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காவிரியில் இருந்து புனித தீர்த்தம் ஐந்து யானைகள் மேல் ஏற்றி, ஒட்டகம், குதிரை புடை சூழ கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி பங்கேற்றனர்.
மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. ஆற்றின் வடக்கு பக்கம் உத்திரமாயூரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. குரு பரிகார தலமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் கும்பாபிஷேகம் பத்தாம் தேதி நடைபெறுகிறது . இதற்கான யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது. இதனை முன்னிட்டு காவிரி நதியில் புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வேத மந்திரம் ஓத கடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு, ஐந்து யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித கடங்கள் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.