பதிவு செய்த நாள்
05
செப்
2023
04:09
பல்லடம்: இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போட்டு தேர்வு செய்யக்கூடாது என, உதயநிதியின் பேச்சுக்கு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இந்து தர்மம் குறித்து இழிவாக பேசினார். இதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இந்து தர்மத்தை பலரும் கேலி செய்கிறார்கள். கேவலப்படுத்துகின்றனர். இந்து மதத்தை அழிக்கும்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர். கொசுவை ஒழிப்பது போல் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி கூறுகிறார். கருணாநிதி நல்ல முறையில் ஆட்சி செய்தார். அவரது மகன் ஸ்டாலின் அதை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறார். அவ்வழியில், அடுத்து ஆட்சி செய்வதற்கான தகுதிகளை உதயநிதி வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதை தவிர்த்து, இந்து தர்மத்தையே அழித்து விட வேண்டும் என, வாய் கூசாமல் மேடையில் பேசி வருகிறார். குறைந்த வயதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதை சிறப்பாக செய்யாமல், இந்து தர்மத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது. இந்து தர்மத்தை கொச்சைப்படுத்துபவர்களை தேர்தலில் நாம் தேர்வு செய்யக்கூடாது. அமைச்சர் உதயநிதியின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். என்று கூறினார்.