பதிவு செய்த நாள்
06
செப்
2023
12:09
மைசூரு: தசரா விழாவுக்காக முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுக்கு, நேற்று மைசூரு அரண்மனை வளாகத்திற்குள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் முக்கிய அடையாளமே விஜயதசமி அன்று நடக்கின்ற ஜம்புசவாரி ஊர்வலம் தான். யானை மீது தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை அமரவைத்து, ஊர்வலம் அழைத்துச்செல்வதை பார்ப்பதற்காக, பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர். இதற்காக ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, காட்டில் இருந்து யானைகள் அழைத்து வரப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக மத்திகோடு, துபாரே , ராம்புரா முகாம்களில் இருந்து ஒன்பது யானைகள், கடந்த 1ம் தேதி மைசூரு நகருக்கு அழைத்து வரப்பட்டன. இந்த யானைகள் நகரின் அரண்ய பவன் வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. இங்கு, அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு மைசூரு மண்டல வன பாதுகாவலர் மாலதி பிரியா தலைமையில் பூஜை செய்து, மலர் துாவி, நேற்று அரண்மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பின், நண்பகல் 12:01 மணி முதல், 12:51 மணிக்குள் அபிஜித் சுப லக்னத்தில், ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயிலில் பூஜை செய்து, அரண்மனை வளாகத்துக்குள் பாரம்பரிய முறைப்படி அழைத்துச்செல்லப்பட்டன. மாவட்ட நிர்வாகமும் அரண்மனை நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், அரசு சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா பங்கேற்று, யானைகளை வரவேற்றார். நாதஸ்வரம், மேளதாளங்கள், டொல்லுகுனிதா ஆகிய நாட்டுப்புறகலைகளுடன் யானைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.