பதிவு செய்த நாள்
07
செப்
2023
05:09
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களக்குடி கோகுலபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேற்று விளையாட்டு போட்டி, விளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், வான வேடிக்கை நடந்த பின்னர் மூலவர்கள் பாமா ருக்மணி சமேத கண்ணபிரானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. இரவு 12:00 மணியளவில் கண்ணபிரான் பிறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 9 மணி முதல் தொடர் அன்னதானமும், மாலை 4:00 மணியளவில் உறியடித்தல், மஞ்சள் நீராட்டு விழா, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. ஏற்பாடுகளை யாதவ சங்கம் மற்றும் களக்குடி கோகுலபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர். கீழக்கரை கோகுலம் நகரில் உள்ள பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணர் கோயிலில் 30ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விளையாட்டு விழா, உறியடி உற்ஸவம் மஞ்சள் நீராட்டு விழா, அன்னதானம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் மாடசாமி, கோயில் டிரஸ்டி ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் கோயிலில் 30ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நேற்று விளையாட்டு போட்டி, விளக்கு பூஜை, கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்டவைகளும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 8 மணியளவில் நூற்றுக்கு மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், 9:00 மணியளவில் சமுதாயக் கொடி ஏற்றியும், காலை 10:00 மணியளவில் தேர் ஊர்வலமும் பகல் 3:00 மணியளவில் உறியடி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை நல்லிருக்கை யாதவ சங்கத்தினர் செய்திருந்தனர். ஊராட்சித் தலைவர் தனபாக்கியம், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.