பதிவு செய்த நாள்
08
செப்
2023
11:09
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் பள்ளிகொண்ட பெருமாள் கூரையில் இருந்து, சோழர் கால வணிக குழு சார்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளத்தில், பள்ளிகொண்ட பெருமாள் கோவில் உள்ளது. அதன் புனரமைப்பு பணி நடக்கிறது. அதன் கூரையில் இருந்த கல்வெட்டு தனியே எடுத்து வைக்கப்பட்டது. அதை, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: மேல்பகுதி அரைவட்டமாக உள்ள இந்த கல்வெட்டு, ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதில், கிரந்த எழுத்துடன் கூடிய மெய்கீர்த்தி உள்ளது. இதிலுள்ள தகவல்படி, இந்த ஊர் அப்போது, சிறந்த வர்த்தக மையமாக இருந்துள்ளது. இங்கு பல வணிக குழுக்கள் தங்கி உள்ளனர். அவர்கள், தங்களின் பாதுகாப்புக்காக வீரப்படையை வைத்திருந்தனர். அவர்களில், சோமய்யன் மகன் சாமுண்டன் என்ற வீரன் செய்த சாகச செயலை இந்த கல்வெட்டு கூறுகிறது. மேலும் அவனுக்கு வெகுமதியாக, வீரர்கள் தங்க வீரப்பட்டணம் எனும் ஊரை, ஐநுாற்றுவர் என்ற வணிக குழுவினர் உருவாக்கியதாக செய்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.