பதிவு செய்த நாள்
09
செப்
2023
04:09
தொண்டாமுத்தூர்: காளம்பாளையத்தில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மதுரையில் தயாரிக்கப்பட்ட மாசில்லா விதை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கோவையில், பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காளம்பாளையத்தில், 5 இளைஞர்கள் இணைந்து துவங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் மதுரையில் முற்றிலும் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விதை விநாயகர் சிலையை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சேர்ந்த அருண் கூறுகையில், " நாங்கள், 5 பேர் இணைந்து, ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கி, 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். நாங்கள், நாடுமுழுவதும் உள்ள கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஊரிலும், சிறப்பு வாய்ந்த பொருட்களை, அங்குள்ள கைவினை கலைஞர்கள் செய்த பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்குமான பொருட்களையும், எங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறோம். இம்முறை, மதுரை மாவட்டம், விளாச்சேரி கிராமத்தில் இருந்து முற்றிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விதை விநாயகரை, கைவினை கலைஞர்களிடம் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இந்த விளாச்சேரி கிராமம் முழுவதும், மண்ணால் செய்யப்பட்ட சிலை, பானைகளை உருவாக்குவதே வேலை. 6 இன்ச் மற்றும் 10 இன்ச் என, இரு ரகங்களில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறோம். அதோடு விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் உருவம் பொறித்த மண் விளக்கு, மண் பூந்தொட்டிகளையும் விற்பனை செய்து வருகின்றோம். தொடர்புக்கு, 7708872651 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்,"என்றார்.