பதிவு செய்த நாள்
13
செப்
2023
12:09
செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செங்கோட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், மண்பாண்ட அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது. இதில் புதிதாக விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலை தயாரிப்புக்கு, கிழங்குமாவு, காகித கூழ், வாட்டர் கலர் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்பதால், இந்த சிலைகளை பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயன விநாயகர், நந்திகேஷ்வரா விநாயகர், கற்பக விநாயகர் திருப்பதி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட்ட பல வடிவங்களில் 30க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது. இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளது. கேரளா மாநிலம் கொல்லம், புனலுார், திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிலைகள் வாங்க ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.