பதிவு செய்த நாள்
13
செப்
2023
05:09
எங்கிருந்து வந்ததோ, அங்கே உயிர் மீண்டும் செல்கிறது. இந்த சுழற்சியிலிருந்து யாரும் தப்ப முடியாது. பிறந்த உயிர் அனைத்திற்கும் இந்த நியதி பொருந்தும். இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காவே மண்ணில் செய்த விநாயகரை மண்ணிலேயே கலக்கும் படியாக செய்கிறோம்.
அணுவுக்கு அணுவாகவும், அகிலாண்ட கோடியாகவும் இருப்பவர் விநாயகர். விநாயகர் அகவலில் அவ்வையார், அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்று அவரது தன்மையை குறிப்பிடுகிறார். விநாயகரின் உருவம் மிகப்பெரிதாக இருப்பதால்,மகாகாய என்ற பெயர் அவருக்கு உண்டு. விநாயகர் சதுர்த்தியில் கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.