பதிவு செய்த நாள்
18
செப்
2023
03:09
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா, 75 கிலோ என மொத்தம், 150 கிலோ எடையுள்ள "ராட்ஷத கொழுக்கட்டைகள் நெய்வேத்யம் செய்யப்பட்டது.
விநாயகர் அவதார திருநாளான விநாயக சதுர்த்தி விழா, திருச்சி மாவட்டத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய கடைவீதி பகுதிகளில் விற்கப்பட்ட களிமண் விநாயகர்களை, வீடுகளில் வைத்து வழிபட பெண்கள் வாங்கிச் சென்றனர். விநாயகருக்கு விருப்பமான, அப்பம், பொரி, கொழுக்கட்டை போன்ற உணவுப் பொருட்களையும், கொய்யா, பேரிக்காய், வாழைப்பழம் போன்ற பழ வகைகளையும் படையலிட்டு விநாயகரை மனதார வழிபட்டனர்.
பிரம்மாண்ட கொழுக்கட்டை: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு, தலா, 75 கிலோ என மொத்தம், 150 கிலோ எடையுள்ள "ராட்ஷத கொழுக்கட்டைகள் நெய்வேத்யம் செய்யப்பட்டது. "பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் தயாரிக்கும் பணியில், நேற்று மதியத்தில் இருந்து கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். இந்த கலவையை இரு பங்காக பிரித்து, துணியில் கட்டி, பெரிய பாத்திரத்தில் வைத்து, இன்று காலை வரை தொடர்ந்து, 18 மணி நேரம் அவித்தனர். காலை 9.30 மணிக்கு உச்சிப்பிள்ளையாருக்கு "சுடச்சுட கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்பட்டது. கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கு, காலை 10.30 மணிக்கு கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்பட்டது. நெய்வேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள், பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பாலகணபதி அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.