பதிவு செய்த நாள்
18
செப்
2023
05:09
பல்லடம்: இந்து மதத்தை இழிவுபடுத்தும் அமைச்சர்களுக்கு நல்ல புத்தி கொடு என, பல்லடத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில், தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் நடந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இந்து அமைப்பின் சார்பில், விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாரத மாணவர் பேரவை சார்பில், என்.ஜி.ஆர்., ரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பேரவையின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். விநாயகர் வழிபாட்டின்போது, சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய அமைச்சர்களுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகப் பெருமானே. விநாயக பெருமானே, தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடு என, தோப்புக்கரணம் போட்டு, விநாயகரிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து, பல்வேறு தரப்பினர் மத்தியிலும், கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. அவ்வகையில், விநாயகர் சதுர்த்தியான இன்று அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு கண்டனம் தெரிவிக்கும்படியாக இந்நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து அண்ணாதுரை கூறுகையில், சனாதனம் குறித்த அமைச்சரின் கருத்து, இந்து மக்களை பெரிதும் புண்படுத்தி உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் இந்து மதத்தை இழிவுபடுத்தும்படியான அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் கண்டனத்துக்கு உரியது. எனவே, அவர்களுக்கு நல்ல புத்தியை விநாயகர் வழங்க வேண்டும் என வேண்டி வழிபாடு செய்தோம் என்றனர்.