பதிவு செய்த நாள்
19
செப்
2023
11:09
ஜப்பான் : ஜப்பான் முழுவதும் விநாயகருக்கு 250 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன, உள்நாட்டில் காங்கிடென், ஷாட்டன், கனபச்சி (கணபதி) அல்லது பினாயகடன் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஜப்பானில், காங்கி-டெக் என்ற புத்தமத கடவுளுடன் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இவரை விநாயக்ஷா, கவான்வின் ஷேர் என்ற பெயரில் அழைக்கின்றனர். யோக நிலையிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்குள்ள கோவில்களில் நான்கு திசைகளுக்கு ஒரு விநாயகர் சிலை வீதம் அமைக்கப்பட்டு திசைகளின் காவலராக கருதி வழிபடுகின்றனர். கி.பி.6ம் நூற்றாண்டில் இங்கு விநாயகரை வழிபடும் வழக்கம் துவங்கியது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்கு உள்ள அனைத்து கணபதி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை செய்து மனமுருகி ஜப்பான் பக்தர்கள் வழிபட்டனர்.
உலகமே விரும்பும் சனாதன தர்மம்: உலகெங்கும் வணங்கப்படும் கடவுளாக விநாயகர் எப்போதும் இருந்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பர்மா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாவா, கம்போடியா, சீனா, மியான்மர், மங்கோலியா, வியட்நாம், கொரியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியர்கள் பலரும் வசிக்கின்றனர். அந்த நாடுகளில் ஹிந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் உலகம் முழுதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்நாடுகளில் உள்ள இந்தியர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளும் விநாயகரை கையெடுத்து கும்பிட்டு தரிசனம் மேற்கொண்டனர். அந்த வகையில் ஜப்பானில் நூற்றுக்கணக்கான அந்நாட்டு மக்கள் கூடி விநாயகரை வழிபடும் வீடியோ வைரலாகியுள்ளது.