பதிவு செய்த நாள்
19
செப்
2023
03:09
மைசூரு: கேரளாவை போன்ற வடிவம் மற்றும் சம்பிரதாயத்தை பின்பற்றும் விநாயகர் கோவில், நஞ்சன்கூடில் அமைந்துள்ளது. மைசூரு, நஞ்சன்கூடின், சிந்துவள்ளி கிராமத்தில், சந்தான கணபதி கோவில் அமைந்துள்ளது. 2011ல் கட்டப்பட்ட இக்கோவில், கேரளாவில்
உள்ள கோவில்களை போன்ற வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. அதே சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. சந்தான கணபதி கோவிலுக்கு, தம்பதியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். குழந்தை வரம் தரும் சக்தி கொண்டவர் என்பதால், தம்பதியர் அதிகம் வருகின்றனர். தினமும் காலை 6:00 முதல், மதியம் 1:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பூஜை , புனஸ்காரங்கள் நடக்கின்றன. செவ்வாய், சனிக்கிழமை சிறப்பு தினமாக கருதப்படுகின்றன. குழந்தை வரம் வேண்டி, இங்கு வரும் தம்பதியர், தண்ணீரில் குளிப்பர். அடி சேவை , உருள் சேவை செய்கின்றனர். கணபதிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பிரசாதமாக பெறுகின்றனர். இது போன்று, ஐந்து வாரம் கணபதிக்கு வெண்ணெய் அலங்காரம் செய்தால், வேண்டுதல் நிறை வேறும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. கோவிலின் பின் பகுதியில் உள்ள குளத்தின் நடுவில், பீரேஸ்வரர் குடிகொண்டு உள்ளார். மைசூரில் இருந்து, 35 கி.மீ., தொலைவிலும், நஞ்சன்கூடில் இருந்து 10 கி.மீ., தொலைவிலும், சந்தான கணபதி கோவில் உள்ளது. விநாயகர் ச துர்த்தி தினமான நேற்று, பக்தர்கள் திரளாக வந்தனர்.