பதிவு செய்த நாள்
19
செப்
2023
03:09
குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு. இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது பொருள். அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலத்தில் தான்.