பதிவு செய்த நாள்
20
செப்
2023
01:09
ஓசூர்: ‘காந்தாரா’ பட காட்சிகளை போல் செட் அமைத்து, தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளது, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா, ஸ்ரீராஜ மார்த்தாண்ட கணபதி பக்த மண்டலி சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கன்னட மொழி திரைப்படமான ‘காந்தாரா’ பட காட்சிகளை போல் செட் அமைத்து, அதில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முகப்பில் பிரமாண்ட உருவத்தில் பன்றி முகம் மற்றும் முன்னங்கால் அமைக்கப் பட்டுள்ளன. அதில் நுழைந்து சென்றால் காந்தாரா செட்டிற்குள் செல்ல முடியும். அங்கு, 20 அடி அரியணையில், பஞ்சுருளி சுவாமி சிலை உள்ளது. அதன் கீழ் அருள் வந்து ஆடும் பூசாரி உருவம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. செட்டின் வலதுபுறம் ‘காந்தாரா’ படத்தில் மன நிம்மதி தேடி காட்டுக்குள் வரும் ராஜா, பஞ்சுருளி சுவாமியை பார்ப்பது போன்ற காட்சியும், அருள் வந்து ஆடும் பூசாரியிடம், அருள்வாக்கு பெற்ற பின், பரிவட்டம் கட்டியிருப்பது போன்ற தோற்றத்தில், ராஜா வேடத்தில் ராஜ மார்த்தாண்ட கணபதியும் காட்சியளிக்கின்றனர். இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏராளமான பக்தர்கள் செட் முன் நின்று, ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். இந்த செட் அமைக்க, 15 நாட்கள் விரதமிருந்து வேலை செய்துள்ளனர். மேலும், விநாயகர் சிலையை கரைத்த பின், தர்மஸ்தலா அருகே உள்ள பஞ்சுருளி அன்னப்ப சுவாமி கோவிலுக்கு சென்று விரதத்தை முடிப்பதாக, ஸ்ரீராஜ மார்த்தாண்ட கணபதி பக்த மண்டலி நிர்வாகிகள் தெரிவித்தனர்.