கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி சனிக்கிழமை விழா மற்றும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா, கடந்த, 16ம் தேதி துவங்கியது. இன்று புரட்டாசி சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, உற்சவமூர்த்தி அரங்கநாத பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருவாதனை, வேத பாராயணம், உபநிஷ அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டது. பின்பு தீபாராதனை காண்பித்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் முன்பு ஏராளமான தாசர்கள் அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு காய்கறிகளை தாசர்களுக்கு படைத்தனர். வீடுகளில் பொங்கல் வைத்து, விரதத்தை முடிக்க, தாசர்களிடம் இருந்து, சிறிதளவு உணவு பொருட்களை வீடுகளுக்கு பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.