பதிவு செய்த நாள்
23
செப்
2023
12:09
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவம் விழாவில், கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மலையப்ப சுவாமியை வழிபட்டனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி, தென்திருப்பதியில் வேங்கடேஸ்வர ஸ்ரீவாரி கோவில் உள்ளது. கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் விழா, கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து தினமும், ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து, கொண்டு வந்த மாலையை வேங்கடேஸ்வர ஸ்ரீவாரி சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளினார். இரவு எட்டு மணிக்கு கருட சேவை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மலையப்ப சுவாமியை வழிபட்டனர். இன்று, (23ம் தேதி) காலை அனுமந்த வாகனமும், மாலை தங்க ரதமும், 24ம் தேதி காலையில் சூர்ய பிரபை வாகனமும், மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, 25ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேரோட்டமும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 26ம் தேதி மாலை கொடி இறக்கம் வைபவத்துடன், பிரமோற்சவம் விழா நிறைவடைகிறது.