வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா; தாசர்களுக்கு அரிசி, பருப்பு படைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2023 05:09
அன்னூர்: பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர்.
திருப்பதியில், ஏழு மலைகளுக்கு நடுவே வெங்கடேச பெருமாள் அருள் பாலிக்கிறார். அதேபோல் கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள, மொண்டி பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலும் ஏழு மேடுகளுக்கு அடுத்து அமைந்துள்ளது. இக் கோவில் மேலைத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் இங்கு திருவிழா நடக்கிறது. திருவிழாவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் வந்து தரிசிப்பது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமையான இன்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அதிகாலை 3:00 மணி முதலே பல்லாயிரம் பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பஜனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, உற்சவர் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். பக்தர்கள் தாசர்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் தானியங்களை படைத்து வழிபட்டனர். கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வரும் 30 ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை காலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி திருவீதியுலா நடக்கிறது.