பதிவு செய்த நாள்
25
செப்
2023
11:09
வேலுார்: பெருமாள் வடிவ பப்பாளி பழத்துக்கு, வேலுார் மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். வேலுார் முத்து மண்டபம் பகுதியைச்சேர்ந்தவர் ரங்கநாதன், 50. பழ வியாபாரி. இவர் தினமும், வேலுார் அருகேயுள்ள அப்புக்கல் கிராமத்தில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று, பழங்கள் வாங்கி வந்து வேலுாரில் வியாபாரம் செய்கிறார். நேற்று முன் தினம், ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளிப்பழங்கள் கொண்டு வந்தார். அதிலிருந்த ஒரு பப்பாளி பழம், பெருமாள் உருவத்தில் இருந்தது. அதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அந்தப் பழத்துக்கு நாமம் இட்டு, பூக்களை வைத்து பூஜை செய்தனர். பின், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சுவாமி அருகே வைத்தனர். இந்த அதிசயப்பழத்தை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம், பெருமாள் வடிவில் பப்பாளி பழம் வந்திருந்தது வேலுார் மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.