பதிவு செய்த நாள்
25
செப்
2023
03:09
பெங்களூரு ; விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் நிகழ்ச்சிக்கு, அக்டோபர் 2ம் தேதி வரை பெங்களூரு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கடந்த 18ம் தேதி நடந்தது. அன்று முதல் விநாயகர் சிலைகள், ஏரிகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. தினமும் விநாயகர் சிலைகள், ஏரியில் கரைக்கப்படுகின்றன. வீடுகளில் வைத்து கொண்டாடியவர்கள் தினமும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களில், தங்கள் குடும்பத்தினருடன் சிலைகளை எடுத்து வருகின்றனர். சில குழந்தைகள் வீட்டில் இருந்து எடுத்து வரும் போது, தன்னை விட்டு விநாயகர் செல்வதாக நினைத்து, அழுது அடம் பிடித்தன.
பல்வேறு ஹிந்து அமைப்புகள், இளைஞர் சங்கங்கள் என பலரும் பெரியளவில் விநாயகர் சிலைகளை கொண்டு வந்தனர். நேற்று சர்வஜனிகா கணேச உற்ச வசமிதி தண் டு பகுதி சார்பில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் சிவாஜி நகர் கன்டோன்மென்ட், வீரப் பிள்ளை தெரு, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, தருமராஜா கோவில் தெரு, ஷெப்பிங்ஸ் சாலை, திம்மையா சாலைகளில் இருந்து விநாயகர் சிலைகள் புறப்பட்டன. ஊர்வலத்தில் பாடி பில்டர் வேடம், சங்கிலிகருப்பன் வேடம், யானை தந்தம் சிம்மாசனத்தில் விநாயகர், இயற்கையை காக்கும் ஜெகத்ரட்சகன் விநாயகர், கருட வாகனத்தில் வீர விநாயகர், சர்ப்ப வாகன விநாயகர், முத்தாலம்மா விநாயகர், பெருமாள் விநாயகர், கயிலாய விநாயகர், பாண்டுரங்க விநாயகர் என பல விதமான வடிவங்கள் எடுத்து வலம் வந்தார். இளைஞர்கள் மேளங்கள் அடித்தபடி, நடனமாடியபடி வந்தனர். கன்டோன்மென்ட் பகுதி முழுதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.