இறைவனிடம் சரணாகதி வேண்டும் *இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 06:10
மதுரை: இறைவனிடம் சரணாகதி அடைந்தால் நம்மை காப்பான் என்று மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் நடந்த கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவில் சொற்பொழிவாளர் இலக்கியமேகம் ஸ்ரீனிவாசன் பேசினார்.
யோகமும் போகமும் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது. ஸ்ரீ ராமன் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொண்டான். அதனால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். நம்முடைய குருகுல கல்வி முறையில் அனைத்து பிரிவினரும் கல்வி கற்றனர். வேத காலத்தில் இருந்து பெண்கள் கல்வி கற்றனர். சங்க காலத்திலும் அவ்வையார், காக்கை பாடினியார் போன்ற கவிஞர்கள் மன்னர்களுக்கு இடையே நடந்த போரை நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர். புண்ணியம் பெறுவதற்காக ஒவ்வொருவரும்
கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு போய் பாவம் செய்யக்கூடாது. கோயிலில் பகவானுக்காக விளக்கேற்றினால் நமக்கு சர்வமும் கிடைக்கும். இறைவனிடத்தில் நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் தினமும் நமக்கு அதிசயம் நடக்கும். இறைவன் நம்மை பார்க்க வேண்டும் என நினைத்து கோயிலுக்கு செல்ல வேண்டும். உலகத்தில் நாம் ஒன்றும் இல்லை என நினைத்து இறைவனை நம்பி சரணாகதி அடைந்து விட்டால் அவன் நம்மை பார்த்துக் கொள்வான். உலகில் மனைவி அங்கீகாரம் செய்தால்தான் கணவன் தர்மம் செய்ய முடியும். ஒருவர் கொடுப்பதை யார் தடுத்தாலும் அவன் குடும்பம் உண்பதும் உடுப்பதும் இன்றி கெடும் என்கிறார் வள்ளுவர். பெரியவர்களை விழுந்து வணங்கினால் வயதும் செல்வமும் பெருகும் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். விழுந்து வணங்கினால் நம்மிடம் உள்ள ஈகோ போகும். எந்த சூழ்நிலையிலும் என்னோடு இறைவா நீ இரு என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். தினமும் எழுந்தவுடன் கஜேந்திர மோட்சத்தையும் திரவுபதி கதையை நினைக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கந்த சஷ்டி கவசம் விஷ்ணு சகஸ்ரநாமம், சுப்ரபாதம் போன்ற பகவான் நாம சப்தங்கள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும். ஒருவனிடத்தில் வீரம் இருப்பதைக் காட்டிலும் பணிவு இருக்க வேண்டும். யோகம் என்பது செல்வம். போகம் என்பது அதை அனுபவிப்பது. செல்வம் மட்டும் இருந்தால் போதாது அது அனுபவிக்கிற வாய்ப்பும் வேண்டும். ராமனும் சீதையும் செல்வமும் அதை அனுபவிக்கும் வாய்ப்புமாக இணைந்து இருந்தனர். பெற்ற தாயிடம் எப்படி பேசுகிறோமோ அதுபோல இறைவனிடம் பேச வேண்டும். அப்போது தான் நம்மை இறைவன் நல்ல பாதையில் அழைத்துச் செல்வான். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். மதுரை எஸ். எஸ். காலனியில் உள்ள எஸ். எம். கே. திருமண மண்டபத்தில் இன்றும் நாளையும் (அக்.5, 6) இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசனின் சொற்பொழிவு நடக்கிறது.