பதிவு செய்த நாள்
16
அக்
2012
11:10
சென்னை: சென்னையில் உள்ள பல கோவில் குளங்கள், மெரீனா கடற்கரை மற்றும் பல பகுதிகளில், மகாளய அமாவாசையை ஒட்டி தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.ஐதீகம்முன்னோர் இறந்த மாதத்தின் திதியன்று, சிரத்தையுடன் தர்ப்பணம் கொடுப் பதை சிரார்த்தம் என்பர். தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், அமாவாசை தினம் சிறந்தது.மாதம் தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை தரும். மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.ஆயிரக்கணக்கானோர் மகாளய அமாவாசையான நேற்று சென்னையில் உள்ள அனைத்து கோவில் குளங்கள், மெரீனா கடற்கரை மற்றும் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பாரிமுனை கந்தசுவாமி கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வளசரவாக்கம் கேசவர்த்தினி அம்மன் கோவில், விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில், புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஈஸ்வரன் கோவில், வைத்தீஸ்வரன் கோவில். செங்குன்றம் காந்தி நகர் ஆலமரம், புழலேரிக்கரை பகுதி, மாதவரம், புழல் சுற்று வட்டாரப் பகுதிகள் போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்குன்றம் புழலேரிக்கரை அருகே ஜி.என்.டி.சாலையில் அதிகாலை முதலே "திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் ஆபத்தான சாலை வளைவில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.சென்ட்ரல் எதிரே உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலில் நேற்று ஏராளமான புதிய வாகனங்களுக்கு பூஜை நடந்தது. திருஷ்டி பூசணிக்கு கிராக்கி வழக்கமாக அமாவாசை தினத்தன்று திருஷ்டி பூசணி அதிகளவில் விற்கப்படும். நேற்றைய மகாளய அமாவாசைக்கு திருஷ்டி பூசணிக்கு கிராக்கி அதிகமாக இருந்தது. திருஷ்டி பூசணிக்காய் சாதாரணமாகவும், வர்ணம் பூசப்பட்டும் விற்பனைக்கு இருந்தன. 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை திருஷ்டி பூசணிக்காய்கள் விற்கப்பட்டன.பசுக்களுக்கு அகத்திக் கீரை கொடுப்பது வழக்கம் என்பதால் அதன் விலையும் நேற்று அதிகரித்திருந்தது.