உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசை தினமான நேற்று நிகும்பலா யாகம் நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வரர் கோவிலில் பிரத்தியங்கரா சன்னதி உள்ளது. அதையொட்டி இக்கோவிலில் அமாவாசை தோறும் பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடந்து வருகிறது.ஆவணி அமாவாசையான நேற்று காலை 10.30 மணிக்கு யாகம் துவங்கி சங்கல்பம், சிறப்பு பூஜை நடந்தது. 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் ஊற்றப்பட்டன. பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேற வெற்றிலையில் எழுதி கொடுத்தனர். அதனை யாக குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொட்டினார்.கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகம் நடத்தினர். பிரத்தியங்காதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.