சனாதன தர்மம்–2; வேதம் நிறைந்த தமிழகம்.. ஆனால் இன்றைய நிலை..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2023 02:10
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்பான வாய்ஸ் ரெக்காடரில் முதல் குரலைப் பதிவு செய்ய ஜெர்மன் அறிஞர் மாக்ஸ் முல்லர் தேர்வானார். ஒலிபரப்பின் முடிவில் அவர், ‘‘எல்லோரும் என் குரலைக் கேட்டு ஆரவாரம் செய்தீர்கள். பாரத நாட்டின் சனாதன தர்மத்தைச் சார்ந்த ரிக் வேத ஸ்லோகத்தை நான் சொன்னேன். இதன் பொருள், ‘‘ஓ... அக்னி தேவனே...இருளில் ஒளிரும் உம்மை பக்தியுடன் வணங்குகிறோம். உம்மை எளிதாக அணுகும் விதத்தில் மகனுக்கு ஒரு தந்தையாக எங்களுடன் இருங்கள்’’ என்பதாகும். இதைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது.
ஆம்... சனாதன தர்மத்தின் அடிப்படையான வேதங்களை ‘சுருதி’ என்பர். காலம் காலமாக காதால் கேட்கப்பட்டு வாய்மொழியால் பரப்பப்பட்டு வந்ததால் ஏற்பட்ட பெயர் இது. சுருதிக்கு தமிழில் ‘எழுதாக்கிளவி’ என்று பெயர். ‘ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி’ என சிவபெருமானை போற்றுகிறது அப்பர் தேவாரம். உயிர்கள் அனைத்தும் நலமுடன் வாழ வழிகாட்டும் வழிமுறைகளை வேதங்கள் சொல்கின்றன. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். ‘கடவுளே எங்கும் பரவியுள்ளார்’’ என்கிறது யஜூர் வேதம். ‘‘எல்லாப் பொருட்களுமே கடவுள்’’ என்கிறது சாந்தோக்ய உபநிடதம். இயற்கையை நேசிக்க வேண்டும் என்கிறது வேதம். இயற்கையோடு ஒன்றி வாழ், அதை மாசுபடுத்தாதீர்கள். எல்லா உயிர்களையும் நேசியுங்கள். நீர்நிலைகள், பசுக்களைப் போற்றுங்கள் என அறிவுறுத்துகிறது. இந்த எண்ணங்களை செயல்படுத்துபவனே ஹிந்துவாக வாழ்கிறான். அதனால் தான் ஆறுகளை புனிதமாக கருதி வழிபட்டு நீராடுகின்றனர். அவற்றில் எச்சில் துப்பினாலும் பாவம் எனக் கருதிய நாம் இன்று நச்சு, கழிவுகளை கலக்கும் அளவிற்கு சுயநலவாதிகளாகி விட்டோம். முன்னோர் சொன்ன தர்மங்களை பின்பற்ற தவறியதன் விளைவே இது. நன்மை செய்தால் புண்ணியம்... தீமை செய்தால் பாவம் என்கிறது வேதம். மனிதனுக்கு மட்டுமல்ல விலங்கு, பயிர்களுக்கு தீங்கு நினைக்காதே. வயலில் சிறு கல்லைக் கூட அனுமதிக்க மாட்டான் விவசாயி. ஆனால் இன்றோ வயல்வெளி எல்லாம் கட்டிடங்களாக மாறி வருகின்றன. பாவ புண்ணியத்திற்கு பயந்து வாழ்ந்தான் அன்று. இன்றோ பாவமாவது, புண்ணியமாவது எல்லாம் பொய் என நாத்திகம் பேசினான். அதன் விளைவை அறுவடை செய்கிறோம். வீட்டு வாசலில் பச்சரிசி மாவால் கோலமிட்டால் அழகு மட்டுமல்ல எறும்புக்கும் உணவாகும் என்கிறது சனாதனம். ஆனால் இன்றோ ஸ்டிக்கர் கோலத்தை ஒட்டி உயிர் மீது இரக்கம் காட்டுவதையே விட்டு விட்டோம்.
மன்னர் பாரி போரில் வெற்றி பெற்று நாடு திரும்பினார். வெற்றிக் களிப்பில் இருப்பவர்கள் பிறரை லட்சியம் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர் எல்லா உயிர் மீதும் இரக்கம் கொண்டார். படர வழியின்றித் தவித்த முல்லைக் கொடியை வழியில் கண்டார். உடனே தேரை அதனருகில் நிறுத்தி விட்டு நடந்தே அரண்மனை திரும்பினார். பாரியின் மனதில் எழுந்த கருணையின் வெளிப்பாடு நம் மரபு கற்று தந்த பாடம் தான். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்னும் மகாகவி பாரதியார் பாடல் வரியை பாடப் புத்தகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதை நாம் எப்படிச் சொல்ல இயலும்? இன்றும் கூட பல நல்ல உள்ளங்கள் மரம், செடி, கொடிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். தாவரம் உள்ளிட்ட ஓரறிவு உயிர் தொடங்கி ஆறறிவு கொண்ட மனிதன் வரை எப்படி இணைந்து வாழ்வது என்பதை வேதங்கள் எடுத்துச் சொல்கின்றன. ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற பாரதியின் வரிகளை மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டிய பரிதாப நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.