மகாளய அமாவாசை, புரட்டாசி சனி; குவிந்த பக்தர்கள்.. தமிழகம் எங்கும் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 12:10
மதுரை; முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ஆண்டு முழுதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத அமாவாசை முன்னோர் பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். மகாளய அமாவாசையான இன்று (14ம்தேதி) தமிழகம் முழுதும் புண்ணிய நதிகள், சமுத்திரம் போன்ற இடங்களில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்து, தானம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் மற்றும் நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள், தமிழகம் என்றுமே ஆன்மிக பூமி என்று பரவசத்துடன் தெரிவித்தனர்.