பதிவு செய்த நாள்
17
அக்
2023
01:10
தஞ்சாவூர்; கோனேரிராஜபுரத்தில் கி.பி.10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால மூத்த தேவி (தவ்வை) சிற்பத்தினை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டறிந்து உள்ளனர்.
இது குறித்து சங்க நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான கோபிநாத் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., நாராயணன், வரலாற்று ஆய்வாளர் சுவாமிநாதன் ஆகிய இருவரும் அளித்த தகவலின் பேரில், அப்பகுதியில் உள்ள வயல்வெளியை ஒட்டியுள்ள பகுதியில் கிடந்த சிற்பத்தை ஆய்வு செய்தோம். ஆய்வில், கோனேரிராஜபுரத்தினை வரலாற்றில் திருநல்லம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட, கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால மூத்த தேவி (தவ்வை) என கண்டறிந்தோம். வசீகரமான முகம், தலையில் கரண்ட மகுடம், காதில் குழைகளும் ,கழுத்தில் கண்டிகை, சவடி, சரப்பளி ஆகியவைஅணிந்து அமர்ந்த நிலையில் உள்ளார். சிலையின் மார்புபகுதி சிதைவுக்குள்ளாகியுள்ளது. தேவி சிலையின் இடது பக்கத்தில் மகன் மாந்தன் சன்னவீரம்தரித்தும், வலது பக்கத்தில் மகள் மாந்தி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் உள்ளார்கள். மாந்தியின் முகமும் சிதைவுக்குள்ளாகி உள்ளது.மூத்த தேவியின் சின்னமான காக்கை கொடி மாந்தியின் அருகில் காணப்படுகிறது. பல்லவர்களின் ஆட்சியில் தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்துள்ளது. பிற்கால சோழர்கள் காலத்திலும் சேட்டைஎன்ற பெயரில் மூத்த தேவி வழிபாடு நடந்துள்ளதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.