பதிவு செய்த நாள்
18
அக்
2023
04:10
ஈரோடு: சென்னிமலை கோயிலுக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை அறிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரி மிரட்டல் பேச்சு வெளியானது. இதற்கு ஹிந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சென்னிமலை நகரமே குலுங்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டு, சென்னை பேராயர் குணசேகரன் சாமுவேல், வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் இறை தரிசனம் மற்றும் பணிகள் குறித்து ஆய்விற்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: சென்னிமலை முருகன் கோயில் 700 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதற்கென சிறப்புகள், வரலாறு உள்ளது. கடந்த முறை ஆய்விற்கு வந்த போது முள் வேலி, மண்டபம் அமைப்பது குறித்தும் தார் சாலை அமைப்பது குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இதனையடுத்து ரூ.6.7 கோடி செலவில் தார் சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகள் 45 நாட்களுக்குள் துவங்கப்படும். பக்தர் வசதிக்காக 12 கோடி செலவில் சுமார் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த 6 ஸ்தலங்களான திருச்செந்தூரில் ரூ.300 கோடி செலவில் திருப்பணியும், பழனி, சுவாமி மலை, திருத்தணி கோயில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ரோப் கார் வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணி தொடங்கப்பட உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இந்த ஆட்சியில் தான் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியில் அறுபடை வீடுகளில் தவிர்த்து முருகன் திருக்கோயில்களில் மட்டும் 173 பணிகள் ரூ.131 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுபடை வீடுகளில் மட்டுமே 238 பணிகள் ரூ.599 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய பிறகு இந்த அளவிற்கான பணிகள் வரலாற்றில் இல்லாத அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் முதல்வரின் தாரக மந்திரம். அந்தந்த மதத்தினர் விரும்பும் வழிபாடுகளை சுதந்திரமாகவும் பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்கிற வகையிலும் நம்பிக்கையிலும் இந்த அரசு செயல்படுகிறது. தவறு எங்கு நடந்தாலும், எந்த மதத்தினர் மற்றொரு மதத்தினரை அவதூறாக பேசினாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.