பதிவு செய்த நாள்
18
அக்
2023
04:10
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கும்மளாபுரத்தில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவிலை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கும்மளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறை அர்த்த மண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல்லால் வேலைப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது. கருவறைக்கு மேலுள்ள விமானப்பகுதி அண்மை காலத்தை சேர்ந்தது. தற்போது அதிஷ்டானம் முழுவதையும் மறைத்து மேடாக்கி, சுற்றி கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கோவில் தொடர்பான கல்வெட்டுகள் புதைந்திருக்கலாம். அது இருந்தால் இக்கோவிலின் வரலாற்றை இன்னும் தெளிவாக கூறலாம். இக்கோவிலின் சிறப்பு, கருவறையை சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள். நரசிம்மர் இரண்யனை தொடையில் கிடத்தி வதம் செய்தல், லட்சுமி நாராயணர், வேணுகோபால், நவநீதகிருஷ்ணன், ராமன், லட்சுமணன், சீதை உட்பட, 16க்கும் மேற்பட்ட சிற்பங்கள் கருவறை வெளிச்சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளன. கருட கம்பத்தின் பீடத்தின், 4 புறமும் இசைக்கருவிகளை வாசித்தபடி நடனமாடும் சிற்பங்களும் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்று ஆய்வு குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.