பதிவு செய்த நாள்
19
அக்
2023
11:10
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் முக்கியமான கருட சேவை இன்று (19ம் தேதி) நடந்தது.
ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று காலை, மலையப்ப சுவாமி, மோகினி அவதாரத்தில் உலா வந்தார். அவருடன், ஸ்ரீகிருஷ்ணரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவை, இன்று இரவு துவங்கியது. கருட வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமிக்கு, ஏழுமலையான் மூலவருக்கு அணிவிக்கப்படும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 1008 சகஸ்ர காசு மாலை, 108 லட்சுமி உருவம் பதித்த ஆரம், மகர கண்டி ஆகியவை அணிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த ஆண்டாள் மாலையும் அணிவிக்கப்பட்டது. மலையப்பசுவாமி கருட வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட வாகனத்தில் வலம்வரும் போது மூலஸ்தானத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களை அணிந்து வருவதால் மூலவரே நேரில் வருவதாக எண்ணி அவரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை 20ம் தேதி காலை அனுமன் வாகனத்திலும், இரவில் கஜவாகனத்திலும் உலா நடக்கிறது.