பதிவு செய்த நாள்
25
அக்
2023
10:10
மைசூரு, கர்நாடகாவில், வரலாற்று பிரசித்தி பெற்ற மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதை காண, அலைகடலென மக்கள் திரண்டனர்.
விஜயதசமியை ஒட்டி ஆண்டுதோறும், மைசூரில் 10 நாட்கள் நடக்கும், தசரா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழாவை கடந்த 15ம் தேதி, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா துவக்கி வைத்தார். தசரா விழாவில், 10 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. 10வது நாளான நேற்று காலை மைசூரு அரண்மனை வளாகத்திற்குள் மொட்டை அடித்து, குஸ்தி வீரர்கள் சண்டையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த யதுவீர் துவக்கி வைத்தார். ஆறு வீரர்கள் சண்டையிட்டனர். அரை மணி நேரம் நடந்த சண்டைக்கு பின், ஒரு வீரரின் உடலில் இருந்து ரத்தம் வழிந்தது. இதன்பின், சண்டை நிறுத்தப்பட்டது. சண்டையில் வென்றவர், தோற்றவருக்கு பரிசு வழங்கி, யதுவீர் பாராட்டினார். தசரா துவக்க நிகழ்ச்சிக்காக, அரண்மனையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த, சாமுண்டீஸ்வரி தேவியின் தங்க சிலை, நேற்று காலை மீண்டும் அரண்மனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரி, அபிமன்யு யானையின் முதுகில், ராட்சத கிரேன் மூலம் துாக்கி வைக்கப்பட்டது. சரியாக மாலை 5:09 மணிக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மன்னர் வம்சத்தின் யதுவீர் ஆகியோர், தங்க அம்பாரி மீது மலர் துாவி, ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அப்போது, 21 பீரங்கி குண்டுகள் முழங்கின. அபிமன்யு யானை கம்பீரமாக நடந்து செல்ல, பின்தொடர்ந்து 13 யானைகளும், குதிரைகளும் சென்றன. அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன. ஜம்பு சவாரி ஊர்வலம், 5 கி.மீ.,யில் உள்ள பன்னிமண்டபத்தில் இரவு 7:15 மணிக்கு நிறைவு பெற்றது.