பதிவு செய்த நாள்
27
அக்
2023
04:10
கர்நாடகா; கலபுரகியில் உள்ள கோவில் ஒன்றில், அவ்வப்போது நிறம் மாறும் விநாயகர் இடம் பெற்றுள்ளார். ஒருநாள் உள்ள நிறம், மறுநாள் இருப்பதில்லை. இங்கு பக்தர்கள், மாறுபட்ட முறையில் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். கலபுரகியின் பங்கூர் கிராமத்தின், முத்தகா - பங்கூர் சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள விநாயகர், தானாகவே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. 15 அடி உயரம் கொண்டது. ஒரு காலத்தில் ஆண்டு தோறும், சிலை உயரமாக வளர்ந்து கொண்டே இருந்தது. முன்னோர்கள் இதன் மீது இரும்பு அடித்து, வளர்வதை நிறுத்தினார்களாம். அனைத்து கோவில்களிலும், தங்கள் பிரார்த்தனை பலித்தால், பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். தீ மிதிப்பது, அலகு குத்துவது, ஆணி செருப்பு அணிந்து நடப்பது, தீச்சட்டி எடுப்பது, தலை முடியை காணிக்கை செலுத்துவது என, பல விதங்களில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்குள்ள விக்ன விநாயகருக்கு, இதுபோன்ற கடினமான வேண்டுதல்களை செய்ய வேண்டியது இல்லை. விநாயகர் சிலைக்கு புதிதாக பெயின்ட் அடித்தால் போதும். பக்தர்கள் இங்கு வந்து தங்கள் குறைகளை கூறி, வேண்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின், சிலைக்கு பெயின்ட் அடித்து, பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொருவரும், வெவ்வேறு நிறங்களில் வண்ணம் தீட்டுவதால், சிலை நிறம் மாறுகிறது. இன்று உள்ள நிறம், நாளை இருக்காது. நாளை இருக்கும் நிறம், நாளை மறுநாள் இருப்பதில்லை. பிரார்த்தனை நிறைவேறினால், கோவிலுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, பணம் அனுப்பினால் உள்ளூர் மக்கள், விநாயகர் சிலைக்கு பெயின்ட் அடித்து, பக்தர்களுக்கு போட்டோ அனுப்புவர். பெரும்பாலான பக்தர்கள், கோவிலுக்கு வந்து தங்கள் கையால் சிலைக்கு பெயின்ட் அடித்தும், பிரார்த்தனையை நிறைவேற்றுவர். இப்படி தினம் ஒரு நிறத்தில், தரிசனம் தரும் விக்ன விநாயகர், பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். இதற்காகவே நிறம் மாறும் விநாயகர் என, பெயர் வந்ததாம்.