பதிவு செய்த நாள்
27
அக்
2023
03:10
கோவில்பட்டி; கோவில்பட்டி, செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடந்தன. இதில், அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜா, நித்திய லட்சுமி, ரவீந்திரன், அர்ச்சகர் சுவாமிநாதன், பட்டர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வராம்குமார், சுரேந்தர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.