அன்னூர்: அன்னூரில் ஒரே மேடையில் 1000 பேர் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
அன்னூர் வட்டாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கிராமங்களில் வள்ளி கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு அரங்கேற்றம் நடந்து வருகிறது. இதில் வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், 25வது வெள்ளிவிழா அரங்கேற்றம் அன்னூர் கே.ஜி. மெட்ரிக் பள்ளியில் நேற்று முன் தினம் நடந்தது. அன்னூர், குமாரபாளையம், தாச பாளையம், உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த 1000 பேர் ஒரே நேரத்தில் கைகளை மேலும் கீழுமாக உயர்த்தி கும்மி ஆட்டம் ஆடி அசத்தி, பார்வையாளர்களை வியக்க வைத்தனர். ஆறு வயது சிறுவர், சிறுமியர் முதல் 75 வயது முதியவர் வரை கும்மியாட்டத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் முன்னாள் சர்வதேச இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தமிழாசிரியை சாந்தாமணி பேசுகையில்," கும்மியாட்டத்தால் மனநலம் உடல்நலம் மேம்படும். நம்முடைய கலாச்சாரம் மீண்டும் தழைத்தோங்கும்," என்றார். பயிற்சி ஆசிரியர் பழனிச்சாமி, இணையாசிரியர் ரங்கநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் வள்ளி முருகன் வேடம் அணிந்து நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இரவு 7:00 மணிக்கு துவங்கி 10:00 மணி வரை மூன்று மணி நேரம் கும்மியாட்டம் நடந்தது.